Saturday, 17 November 2012

ஓலைப்பதிவுகள்



ஆற்றுப் பெருக்கு
அடி சுடும் அந்நாளில்
மணல் திருட்டு.

தொட்டனைத்தூறும் மணற்கேணி
ஊழல்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம்
விலைவாசி.

யானை வெரூஉம் புலிதாக்குறின்
கூடங்குளம்.

ஓடுமீன் ஓட உறுமீன்
வரும் வரைக்கும்
வாடி நிற்குமாம் கொக்கு
அந்நிய முதலீடு.
எருது நோய்
காக்கைக்கு தெரியுமா
பாராளுமன்றத்தில் லோக்பால்.

Tuesday, 13 November 2012

சாலையாசகம்




வாகனப் புழுதிகளால்
மேனியின் அழகு தொலைத்து
நிற்பது
சாலைமரங்கள் மட்டுமல்ல
நாங்களும்தான்.......
யாசிக்கும் எங்கள் கண்களின் மேல்
புகையை உமிழும்
வாகனங்கள்........
முதியோர் இல்லத்திற்கும்
குழந்தைகள் காப்பகத்திற்கும்
ஏனோவென்று பயணிக்கும்
வண்டிச்சக்கரங்களுக்கு
தெரியுமா  எங்கள்
உறவுகளின் வலிகள்...........
கல்வித்தேடலும்
ஊட்டம் சேர்த்தலும்
பிணி தொலைத்தலும்
எங்கள் உரிமைகள் என்பதை
ஏற்க மறுக்கும்
கரியுமிழும் வாகனம்...............
அழுக்கன், திருடன் அனாதை
பிச்சைக்காரன் என்ற
குறியீடுகள்
உணரத் தவிர்க்கின்றன
மனிதர் நாங்கள் என்று......
அதிகாரத்திமிருடன்
எங்கள் மீது
சீறிப்பாய்கின்றன
உன்னால்
கொளுத்துப்பெருத்த
டாபர்மேன்கள்......................
மனிதம் தொலைத்த
மனிதர்களால்
விலங்குகளாய் திரிகின்றோம்
நாங்கள்....
குத்துயிரும் கொலையுயிருமாய்
சில்லறைக் காசுகளுடன்
சிதறி வந்து விழும்
அதிகபட்சம் நீ
தக்க வைத்த மனிதநேயம்.......
























                          

Monday, 12 November 2012

நினைவுகள்


வசந்தம்  வரும்
வாடை வரும்
கார் கோடை வரும்
முதுமை மூச்சுக்குள்
திணிந்து செல்லும்
நீ மட்டும்
நித்தம் இளமையை
விதைத்து செல்வாய். 
நினைவுகள்