Thursday, 5 September 2013

குழந்தையின் ஆகாயம்


விரல் நூலில்
விலங்கிடப் பட்டு
போகும் வழியெல்லாம்
தொடரும் பட்டங்கள்...

கண்டிராத காந்தியை ஏசுவை
வரைந்து காட்டும்
மேகங்கள்....

வெள்ளைக் கோடுகளாய்
வாணத்தில் கீறலிடும்
விமானங்கள்....

ஆகாய யுத்தத்தில்
மரணமுற்று மழையாகி
ஊருக்குள் புதையும்
நீர்த்துளியாய் மேகங்கள்...

அந்திப் பொழுதுகளில்
அணிவகுத்த கொக்குகள்
நகநுனியில் தூவிச்சென்ற
பூக்கள்....

தரை விழுந்த குஞ்சுகளை
காப்பாற்ற
படையெடுக்கும் காகங்கள்...

எப்போதோ தோன்றி மறையும்
வானவில்லில்
தேடி ஏமாந்த
ஏழாம் வண்ணம்...............

விண்மீனில் புள்ளிவைத்து
கோலமிட்ட
அமாவாசை இரவுகள்....

ஊர் எல்லையில்
ஒற்றைப் பனையருகே
இறங்கி இளைப்பாரும்
பவுர்ணமிகள்..........

குழந்தையின் ஆகாயங்கள்





No comments:

Post a Comment